தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரூ.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த ஆட்சிக் காலத்தில் ஏரிகளைத் தூர்வாருவதாகத் தேர்தலுக்கு முன்பு அறிவித்த திட்டங்கள் அறிவிப்பாகவே உள்ளன. ஆய்வின் மூலம் அறிவிப்புகள் அனைத்தும் பொய்யென தெரியவந்துள்ளது.
லிப்ட் இரிகேஷன் திட்ட செயல்பாடு?
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. வேளாண்மைக்கு நீர் ஆதாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
வேளாண் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தேவையான நீராதார திட்டங்கள், ப்ளோரைடு பாதிப்புகளை குறைக்கும்விதமாக அனைத்து கிராமத்திற்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று தூள் செட்டி ஏரியைத் தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
லிப்ட் இரிகேஷன் திட்டத்தின் மூலம், ஒகேனக்கல் உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்பிட ஆய்வுசெய்து முதலமைச்சர் பார்வைக்கு கொண்டுசெல்லப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’மெய்நிகர் பணம் நாட்டின் பொருளாதாரத்தைத் தகர்க்கும்’ - எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்!