தருமபுரி: அரூர் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை அளிப்பதற்கான மேசை உள்ளிட்ட வசதிகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 09) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், சுகாதாரத்துறை மூலம் மாரண்டஹள்ளி, தீர்த்தமலை, கடத்தூர் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அரூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் வசதிகளும் எலும்பு முறிவு சிகிச்சை அளிப்பதற்கான நவீன மேசை உள்ளிட்ட வசதிகள் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. அரூர் பகுதியில் உள்ள மக்கள் இதுவரையில் சிடி ஸ்கேன் வசதிக்கு தருமபுரி மற்றும் சேலத்திற்குச் செல்லும் நிலை இருந்தது. இனிவரும் காலங்களில் இந்த வசதி, அரூர் அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தையும், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தீர்த்தமலை மற்றும் கடத்தூர் ஆகிய இடங்களில் வட்டார மருத்துவமனை அழகு கட்டடங்கள் கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எட்டு கி.மீ., நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு புறங்களிலும் மரங்கள் நடப்பட்டு இச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சாலைகளை திறந்து வைப்பார்.
இந்த நடைபாதைக்கு பயன்படும் சாலைகளில் சுகாதாரத் துறையினர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டு அதில் தினம்தோறும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலத்திலோ அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியிலோ இன்டர்ன்ஷிப் காலம் உள்பட எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழ்களுடன் முதுகலை படிப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள். இதற்கு மாறாக வந்த செய்திகள் தவறானவை. மேலும், பிற மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள திறந்தவெளி அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள்.
இந்தியாவிலேயே முதல்முறையாக உடல் உறுப்பு மாற்று ஆணையம் தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்பு தானம் பெறும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இதில் அடங்கும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்போது உடல் உறுப்பு தானம் பெறுவதில் அதிகளவு முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணைய மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை என்று பல வகைகளில் இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள மொத்தம் 20 ஆயிரம் மருத்துவப் பணியிடங்களில் ஆயிரத்து 21 பணியிடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வு நடத்தப்பட்டதில் 25 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். ஒரு மாதத்திற்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவம் படிப்பதற்கு 39ஆயிரத்து 924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை 32ஆயிரத்து 649 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் மாணவர்கள் ஒரு சான்றிதழ் வாங்க கால தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிக்க இரண்டு நாள் கால அவகாசம் கேட்டிருந்தனர். இதனால் விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி என்பது, 2 நாள் கூடுதலாக ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஒரே தேதியில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த தேதி அறிவிக்க இன்னும் 10 நாள்கள் ஆகலாம். ஆனால், அதுவரை காத்திருக்காமல், வருகிற 16ஆம் தேதி காலை 10 மணிக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான தகுதி (மெரிட்) பட்டியல் வெளிப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எச்சமிட்ட காகம் மீது இரக்கம் காட்டிய எடப்பாடி பழனிசாமி!