அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தருமபுரி குமாரசாமிபேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமைவகித்து உரையாற்றினார் .
அப்போது பேசிய அவர், ”நேற்று தருமபுரியில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் அமமுக தொண்டர்களை அதிமுகவில் இணைய அழைத்துச் செல்கிறார்கள் என பேசியிருந்தனர். அமமுக தொண்டர்களை அதிமுகவினர் யாரும் அழைக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சித் திறமையைப் பார்த்து கடந்த இரு நாள்களுக்கு முன்பு பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் 250க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
நேற்று முன்தினம் பாலக்கோடு பகுதியில் திமுகவினர் 280க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அமமுகவினர் அந்தந்த பகுதியில் தாமாக முன்வந்து அதிமுகவில் இணைந்துவருகின்றனர். அதிமுகவிலிருந்து யாரையும் மாற்றுக்கட்சியில் இருந்து இணையச் சொல்லி வற்புறுத்தவில்லை.
இன்று பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
விரைவில் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையின் முதல் பகுதி தொடங்கவிருக்கிறது. தருமபுரி நகரப் பகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் வீட்டுமனை இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் வீட்டுமனை வழங்கப்படும்.
முதலமைச்சரின் சீரிய திட்டமான குடிமராமத்து திட்டம் அன்னசாகரம் ஏரி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 420 ஏரிகளில் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு மக்களுக்கும் பல திட்டங்களை அதிமுக அரசு செய்துவருகிறது” என்றார். பொதுக்கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சுபாஷ் திமுகவிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைந்துக்கொண்டார்.
இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...