தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் தர்மபுரி ஜல்லிக்கட்டு பேரவை தொடக்க விழா தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு பேரவையை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ”தர்மபுரி மாவட்டத்தில் இளைஞர்கள் ஆர்வமாக காளைகளை வளர்த்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் நடைபெறுவது போல தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படும்” என்றார்.
பல்வேறு தடைகளை மீறி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கள் நடைபெற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
”பொங்கல் பண்டிகை காலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் எருதுவிடும் விழாவாக நடைபெற்று வந்த நிகழ்வுகள் இனி வரும் ஆண்டு முதல் நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். பாலக்கோடு அருகே உள்ள பல்லேன கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஆலம்பாடி நாட்டு மாட்டின் ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகிறது. இதன் மூலம் நாட்டு மாடுகள், காளை மாடுகள், கன்றுகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும். ஆலம்பாடி நாட்டின அரிய வகை மாடு பாதுகாக்கப்படும்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டார். இவ்விழாவில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப் படுத்தியிருந்தனர்.
இதையும் படிங்க:மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும்’: முதலமைச்சர் பழனிசாமி