உள்ளாட்சித் தேர்தல் குறித்த அதிமுக நல்லம்பள்ளி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். தருமபுரி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக போட்டியிடக் கூடாது. மக்களிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க வரும் 20 நாட்களில் கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், உள்ளாட்சி தேர்தலுக்கு மக்களிடம் சென்று ஓட்டு கேட்க முடியும்.
வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன் விடுபட்ட பெயர்களை நவம்பர் 18ஆம் தேதிக்குள் சேர்ப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில்தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு அதிமுக சார்பில் இரண்டு பேர் நின்று எதிரிக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.
ஊராட்சிக்குட்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து பேசி ஒருவரை மட்டுமே நிற்க வைக்க வேண்டும். கழக தொண்டர்கள் கடுமையாக உழைத்ததால்தான் இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் வெற்றிபெற்றோம். இடைத்தேர்தலில் எப்படி வேலை செய்தோமோ அதே போல் கடுமையாக உழைத்தால்தான் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்' என தெரிவித்தார்.
‘குரங்கு கையில் பூமாலை போல் ஸ்டாலின் கையில் திமுக’ - அன்புமணி விமர்சனம்!