இந்தியாவில் கரோனா வைரஸால் இதுவரை 4, 421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, படிப்படியாக அதிகரித்துவரும் கரோனோ வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் ஒருவாரம் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் 250 காவலர்களுக்கு ஏழு நாள் விடுப்பு அளிக்கப்பட்டது.
அவர்களுக்கான விடுமுறை முடிந்த நிலையில், இன்று பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவருக்கும் (250 பேர்) அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தப் பரிசோதனையில் உடல் தகுதி பெற்ற காவலர்கள் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு!