தருமபுரி மாவட்டம் பி.அக்ரஹாரம் அருகே உள்ள சின்னபெரமனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகள் நவீனா. இவர் இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நான் தனியார் செவிலியர் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பி.அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்தோம்.
காதல் விவகாரம் குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, எனது பெற்றோர் பூதிநத்தம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்வருடன் எனக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து திருமண ஏற்பாடு செய்து வந்தனர். மேலும் எனது பெற்றோர் என்னை வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறி காதலன் முனியப்பனை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு முனியப்பனின் பெற்றோர் உதவியுடன் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் முனியப்பனை திருமணம் செய்து கொண்டேன்.
எனக்கு முனியப்பனுடன் திருமணம் நடைபெற்ற தகவல் எனது பெற்றோருக்குத் தெரியவந்ததும், எனக்கும் எனது கணவரின் குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகவே எனது பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு அளித்து, எனது கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து; காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமைடைந்த காதல் தம்பதி!