தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாதனூரை சேர்ந்தவர் சங்கர். தனியார் நிதி நிறுவனம் மூலம் ரூ.28 லட்சம் கடன் பெற்று லாரி வாங்கியற்காக, மாதம் 56 ஆயிரத்து 600 ரூபாய் என 14 லட்சம் வரை கட்டி முடித்துள்ளார். மீதம் 13 லட்சம் ரூபாய் கட்ட வேண்டிய நிலையில் நான்கு தவணை பாக்கி வைத்திருந்தார்.
கடந்த 28 ஆம் தேதி ராஜஸ்தானில் இருந்து திண்டுக்கல்லுக்கு கல்மாவு ஏற்றிக்கொண்டு தனது மகனுடன் சோலாப்பூர் டோல்கேட் அருகே லாரியை ஓட்டி வந்தார். அப்போது, தனியார் நிதி நிறுவனத்தினர் லாரியை மடக்கி பிடித்து தவணைத் தொகையை கேட்டனர். அதன்பிறகு லாரியை லோடுடன் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து, சங்கர் கடந்த 30ஆம் தேதி சேலத்திலுள்ள அலுவலகத்திற்கு சென்று அலுவலர்களை சந்திக்க முயன்றார். ஆனால், அலுவலர்கள் பார்க்க மறுத்ததால் வீடு திரும்பிய அவர், கடந்த 2ஆம் தேதி மீண்டும் சென்று விசாரித்தபோது நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்தி விட்டு லாரியை எடுத்துச் செல்லும்படி அலுவலர்கள் கூறினர்.
இதனால் மனமுடைந்த சங்கர், அன்று இரவு தனது அம்மா வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாததை கண்ட அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மறுநாள் சங்கரின் தாயார் வீடு திரும்பியபோது, சங்கர் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த சம்பவ இடம் சென்ற கோபிநாதம்பட்டி காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிக்க: சூடான் தீ விபத்து - ராமகிருஷ்ணனின் நிலையைக் கண்டறிய குடும்பத்தினர் கோரிக்கை!