உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவினைத் தொடர்ந்து வேட்பு மனுக்களை பெற வேண்டாம் என அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் அனுப்பியிருந்தது.
இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகக இருந்த நிலையில், காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வாங்க மறுத்தனர். அதனால் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
காலை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம். ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் தேர்தலை நடத்த தடையில்லை என தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகிய பின்னரும், மாநில தேர்தல் ஆணையத்திலிருந்து மேம்பட்ட உத்தரவு வராத காரணத்தால் வேட்பு மனுக்களை வாங்குவதில் அலுவலர்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு