தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எச்சனஹள்ளி ஊராட்சித் தேர்தலில், தலைவர் பதவிக்கு முனிஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலில் வாக்காளர்கள் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது, பிச்சைக்காரர் வேடமிட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து வந்து பணத்தை வேட்புமனு தாக்கல் செய்தார்.
எச்சனஹள்ளி கிராமத்தில் இன்று முதல் நாள் வாக்கு சேகரிக்கும் பணியில், கையில் திருவோடு ஏந்திக்கொண்டு, வாக்காளர்களை சந்தித்து தனக்கு ஒதுக்கப்பட்ட கத்தரிக்காய் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரையை தொடங்கினார்.
இந்நிலையில், இதே பகுதியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்ற இரண்டு வேட்பாளர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பே வாகனத்தில் வந்த இவரை வழிமறித்து வாக்குச் சேகரிக்கக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், தொலைபேசியில் அழைத்தும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதனையடுத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதால், காவல் துறையினர் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பென்னாகரம் பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடத்தில் அவர் புகார் மனு அளித்துள்ளார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்க இன்று வந்தார்.
ஆனால் மாவட்ட தேர்தல் அலுவலரை பார்க்க முடியாது என காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் முனிஆறுமுகத்திற்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அந்த கோரிக்கை மனுவை வழங்கினார்.
இதையும் படிங்க: