தருமபுரி: வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் சேவை மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகம் இன்று (அக்.22) நடைபெற்றது. இந்த முகாமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் தொடங்கி வைத்து, அங்குள்ள மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் “தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் செயல் தலைவர் என்ற முறையில் இங்கு வந்துள்ளேன். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் முதல் குறிக்கோளே, வசதியற்ற பிரிவினருக்கு நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்குவதே ஆகும். அதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையமானது, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதே ஆகும்.
தேவைப்படும் சட்ட உதவிகள் அனைத்தும் தகுதி உள்ள நபர்களுக்கு இலவசமாகச் செய்து கொடுக்கப்படும். சட்ட உதவி கோருபவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருப்பின் அதற்கான உதவிகளைச் சட்ட ஆணையமே செய்து வருகிறது.
இங்குள்ளவர்களுக்குச் சட்ட உதவி ஏதேனும் தேவைப்பட்டால், இங்குள்ள சட்டப்பணிகள் ஆணையத்தையோ அல்லது குழுவையே தொடர்பு கொண்டால், அது நேரடியாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, உங்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளும் இலவசமாக வழங்க ஆவண செய்யப்படும்.
இலவச சட்ட உதவிகள் வழங்குவது மட்டும் எங்கள் பணி அல்ல. அரசாங்கத்தின் மற்ற உதவிகள் உங்களுக்குத் தங்கு தடை இன்றி கிடைப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்வதும் எங்கள் பணியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும் இலவச சட்ட உதவிகள் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதைப் பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர், செயலர் A.நசீர் முகமது, தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி A.மணிமொழி, தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிபதி A.S. ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் அப்பள்ள நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: “நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் வெற்றி முன்னோட்டமாக இருக்கும்” - ஜோதிமணி எம்பி