தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் கூலித்தொழிலார்களாக பணியாற்றி வந்தனர். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் பணியாற்றிவந்த இக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.
இவர்களை மாவட்ட நிர்வாகம் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கர்நாடக மாநிலத்திலிருந்த சொந்த ஊருக்கு திரும்பியதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்டோர் வேடகட்டமடுவு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 200க்கும் அதிகமானோர் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி விட்டு திரும்பியவர்கள் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இதையும் படிங்க: கரோனா நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை - கனிமொழி எம்.பி.