தர்மபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் அதிகரித்தன் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு நீர்வரத்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி தண்ணீர் வரத்து குறைந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு முதல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததாலும், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்க மற்றும் பரிசல் ஓட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: பாரதமாதா நினைவாலயத்தின் பெயர் மாற்றப்படவில்லையெனில் போராட்டம்... பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம்...