தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு அருண்ராஜ் மற்றும் ஜெகன்ராஜ் என்னும் மகன்கள் உள்ளனர். இந்த இரு சகோதரர்களும் தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஃபெர்பக்ட் விஷன் சிட்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற தனியார் சீட்டு கம்பெனியை நடத்தி வந்தனர்.
இவர்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், நாளொன்றுக்கு ரூ.1,800 வீதம் 100 நாட்களில் ரூ.1.80 இலட்சம் திருப்பி தரப்படும் என ஆசை வார்த்தை தெரிவித்து விளம்பரங்களை வெளியிட்டனர். அதனை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.
மேலும் இவர்கள் தங்களிடம் முதலீடு செய்யப்பட்ட பணத்தை ரியல் எஸ்டேட், டிரேடிங் உள்ளிட்டவற்றைச் செய்து லாபம் தருவதாக முதலீடு செய்த பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டு மே 26 வரை முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தொகையை சரிவர வழங்கி உள்ளனர்.
அதன் பின்பு முதலீடு செய்த பொதுமக்களால் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அவர்களது தருமபுரியில் உள்ள தலைமை அலுவலகம், ஓசூர், ஏலகிரி மற்றும் போச்சம்பள்ளி உள்ளிட்ட கிளை அலுவலகங்களும் மூடப்பட்டதாக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்டோர் தாங்கள் முதலீடு செய்த பணத்தை மீட்டுத்தரக்கோரியும், மோசடி செய்த சகோதரர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று (ஜூன் 7) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை (ஜூன் 8) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், தருமபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் உள்ளிட்ட காவல் துறையினர், பூனையானூரில் உள்ள அருன்ராஜ் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோன்று தருமபுரியில் செயல்பட்டு வந்த தலைமை அலுவலகத்தில், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் தலைமையில் போலீசார் பூட்டப்பட்டியிருந்த அலுவலக பூட்டை உடைத்து ஆய்வு நடத்தினர். இதேபோன்று கிளை அலுவலகங்களிலும் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு திடீரென நடத்தப்பட்ட ஆய்வால் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக லாபம் ஈட்டலாம் என பொதுமக்களிடம் ஆசையை தூண்டி, அவர்களின் சூழ்நிலையை பயன்படுத்தி லாபம் ஈட்டும் கும்பலின் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் காவல்துறை வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் இது போன்ற கூட்டத்தை நம்பி இன்றளவும் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதிக லாபம் ஈட்டும் ஆசையில் இருப்பதை இழக்காமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
இதையும் படிங்க: RBI monetary policy: ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!