தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி காப்புக்காடு பகுதியில் தண்ணீர் தேடி மாரண்டஅள்ளி அருகே உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்திற்குள் காட்டெருமை ஒன்று வந்தது. விவசாயி சண்முகம் என்பவரின் 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில், நேற்று மாலை 4 மணி அளவில் அந்தக் காட்டெருமை விழுந்துள்ளது.
இதைக் கண்ட பொதுமக்கள், பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஜேசிபி கிரேன் மூலம் கயிறு கட்டி 20 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு கிணற்றிலிருந்து காட்டெருமையை மீட்டு மீண்டும் திருமல்வாடி காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர்.
வேப்பிலை அள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காடுகள் அதிகம். இதில் அறிய வகை வன விலங்குகளான புள்ளிமான், காட்டெருமை, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததனால் வனப்பகுதியில் நீர் வற்றியதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள், விவசாய நிலங்களில் குடிநீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவதால் விளை நிலங்களை சேதபடுத்துவதாகவும், சமுக விரோதிகளால் வேட்டையாடப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் வன விலங்குகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைத்து விலங்குகளை விளை நிலங்களுக்குள் வராமல் தடுத்தும் பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபத்தை உணராமல் விலங்குகள் அருகே புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!