தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நீரஜ் மிட்டல் ஐஏஏஸ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தருமபுரி வந்திருந்தார். நேற்று மாலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும் நீர்ப்பாசனத் திட்டங்கள் குடிநீர்த் திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்தார்.
இன்று இரண்டாவது நாளாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் உள்ள மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வுசெய்து பார்வையிட்டார்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்படும் ஆலம்பாடி பகுதியில் ஆய்வுசெய்தார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து எவ்வாறு தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கர்நாடகாவிலிருந்து வரும் காவிரிநீரை அளவிடும் பிலிகுண்டுலு பகுதியை ஆய்வுசெய்த அவர் அங்கு நீர்வரத்து நிலவரம் குறித்து மத்திய நீர் ஆணைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உடனிருந்தனர்.