தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பத்ரஅள்ளி பகுதியைச் சார்ந்தவர் கலைவாணி. இவர் நேற்று (ஜூன் 28) தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது பெற்றோருடன் சென்று கணவன், அவரது குடும்பத்தார் கொடுமைப்படுத்துவதாகப் புகார் மனு அளித்தார்.
அவர் அளித்த புகாரில், "கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் எம். தண்டா பகுதியைச் சேர்ந்த பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற்றது. எனது பெற்றோர் ஆறு பவுன் தங்க நகைகள், சீர்வரிசை உடன் திருமணம் செய்துவைத்தனர். எங்களுக்கு சஞ்சனா (5), பவன் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நெருப்பூா் பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான கவிதா என்பவருடன் பாண்டியன் மண உறவைத் தாண்டிய பந்தத்தில் இருந்துவந்துள்ளார்.
இதனால் சம்பாதிக்கும் பணத்தை கவிதாவுக்குச் செலவு செய்யும் பாண்டியன், அவரின் பேச்சைக் கேட்டு என்னையும் எனது குழந்தைகளையும் அடித்துத் துன்புறுத்துகிறார். அதுமட்டுமல்லாது பட்டினி போட்டும் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்.
மேலும் பாண்டியனின் தாய் நீலா, தந்தை பழனிசாமி ஆகியோர் என்னிடம், 'உன் பெற்றோரிடமிருந்து என்ன வரதட்சணை கொண்டுவந்தாய்' எனக் கேட்டு அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு அடித்துத் துரத்துகின்றனர். இப்படி எனது தாய் வீட்டிலிருந்த என்னை பாண்டியன் கடந்த வாரம் சமதானம் செய்து வீட்டிற்கு கூட்டிக்கொண்டுவந்தார்.
வீட்டிற்கு வந்த என்னிடம் பாண்டியன் குடிக்க குளிர்பானம் கொடுத்தார். அதைக் குடித்தவுடன் எனக்கு மயக்கம் வந்தது. மயக்க நிலையில், பாண்டியன் என்னை கட்டிலில் கட்டிவைத்து எனது உடலின் 16 இடங்களில் சூடுவைத்துள்ளார்.
இதை யாரிடமாவது கூறினால் என்னை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன நான், பாண்டியன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து தப்பியோடி எனது தாய் வீட்டிற்கு வந்தேன்.
அதன்பின் அங்கிருந்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சூடு காயங்களுக்குச் சிகிச்சைப் பெற்றேன். எனவே என்னை அடித்தும் சூடுவைத்தும் துன்புறுத்திய பாண்டியன் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காதல் மனைவியை உயிரோடு எரித்த கணவர் உள்பட மூவர் கைது!