கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து தற்போது படிப்படியாகக் குறையத்தொடங்கியுள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 23) நிலவரப்படி தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து குறைந்து 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்துக் குறைவு காரணமாக, மேட்டூர் அணைக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்தது.
இதையும் படிங்க: 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!