தருமபுரி: பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 725க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக லோகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
அதேப் பள்ளியில் வேளாண் ஆசிரியராக பணிபுரியும் கிருஷ்ணன் என்பவர், மாணவர்களுக்குச் சரியாக பாடம் எடுப்பதில்லை என்றும் தேர்வுகள் முறையாக நடத்தாமல் இருப்பதாகவும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் லோகநாதன் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் அதிகாரிகள் நேரில் வந்து பள்ளியில் ஆய்வு செய்து, ஆசிரியர் கிருஷ்ணனை கண்டித்து விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அதனை இன்று வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தேர்வு நடத்திய ஆசிரியர் கிருஷ்ணன் மாணவர்களை தனித்தனியாக அமர வைக்காமல், ஆய்வுக் கூடத்தில் அருகருகே அமர வைத்து தேர்வு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன், மாணவர் மற்றும் பிற ஆசிரியர் முன்னிலையில் வேளாண்மை பிரிவு ஆசிரியர் கிருஷ்ணை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த ஆசிரியர் கிருஷ்ணன் தனது சக ஆசிரியர்களிடம், தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர் பள்ளி வளாகத்திலேயே அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்ட மற்ற ஆசிரியர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசு பள்ளி வேளாண் பிரிவு ஆசிரியர், மன விரக்தியில் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை செய்ய கொள்ள முயற்சி செய்த சம்பவம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்: சொந்த காரணங்களாலோ அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தம் காரணத்தினாலோ தற்கொலை எண்ணம் தோன்றினால், மாநில தற்கொலைத் தடுப்பு உதவி எண் (104) அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் (044-24640050) அல்லது இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்ற எண்களிலும், help@snehaindia.org என்கிற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: கோவையில் ராகிங் கொடூரம்.. ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்த 7 சீனியர் மாணவர்கள் கைது!