தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அமானிமல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தான் படித்த பள்ளியான அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்ற சான்றிதழ் கேட்டு தலைமை ஆசிரியரை அணுகி உள்ளார்.
அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால், முதலில் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்கித் தருமாறு தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார். அதன் பிறகு நோட்டு, பேப்பர் பண்டல்களை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் எனவும், பணமாக கொடுத்து விடுங்கள் எனக்கூறி ரூ.300 பணத்தை பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதைத் தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்ததாகவும் தெரிவிக்கும் முன்னாள் மாணவர் கார்த்திக், பணம் கொடுத்தை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து முன்னாள் மாணவர் கார்த்திக் கூறுகையில், ‘நான் படித்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி சான்றிதழைக் கேட்டு பள்ளிக்கு சென்றேன். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் சசிக்குமாரைச் சந்தித்து, சான்றிதழ் கேட்கும போது ரூ. 300 லஞ்சமாக கேட்டார்.
மேலும், தான் ஆன்லைனில் ரூ.60 கட்டணம் செலுத்திவிட்டதாகவும் தெரிவித்தும், அதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகக் கூறியும் அதை பொருட்படுத்தாமல் பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்குவதற்கு பணம் வேணும் எனக் கேட்டார்.
மேலும், சான்றிதழ் வாங்க அலைக்கழித்ததாகவும், தலைமை ஆசிரியர் நடந்த விதம் சரியில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய விசாரணை நடத்தி பள்ளித் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாணவர் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:"திமுக ஒரு டெங்கு; ஒழித்தால் நன்றாக இருக்கும்" - சி.வி.சண்முகம் விளாசல்