தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கதிரேசன் (38). இவர் மெணசி கடைவீதியில் எலக்ட்ரிக்கல் கடை, சிமெண்ட் கடை நடத்திவருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை மூடிவிட்டு வசூலான பணத்தை எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள பீரோவில் வைத்தார். பின்னர், இரவு 10 மணிக்கு மேல் விவசாய தோட்டத்தில் கட்டட வேலை நடைபெற்று வரும் புது வீட்டை பார்க்க தனது தாயாருடன் சென்றுவிட்டார். பிறகு இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 2 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார்.
இதேபோல பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் கோபாலபுரம் சுகர் மில்லில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்தோடு அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றுவிட்டு இன்று காலை வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, பொருட்கள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வீட்டில் கொள்ளையர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பத், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஒரேநாள் இரவில் அடுத்தடுத்த கிராமங்களில் நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.