தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் வாரந்தோறும் புதன்கிழமை வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்கவும், விற்கவும் வந்து செல்கின்றனர். இதனால் வாரந்தோறும் சுமார் ஒரு கோடி முதல் இரண்டு கோடிவரை வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வார சந்தைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வார சந்தை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. வார சந்தை திறந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வரத்து குறைவாகவே இருந்தது.
கால்நடைகள் 500- க்கும் குறைவாகவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, கேட்பதற்கு ஆள் இல்லாமல் விவசாயிகள் திரும்பி சென்றனர். இந்நிலையில், அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வருவதால், இறைச்சிக்காக சுமார் 2500 ஆடுகள் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரத்தை விட விலை 2000 முதல் 4000 வரை கூடுதலாக விற்பனையானது.
இந்த வார சந்தையில் ஆடு மட்டும் ரூ.35 லட்சத்திற்கு விற்பனையானது. மாடுகள் வாங்க ஆள் இல்லாததால் சுமார் ரூ.20 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகைக்கு சந்தையில் கால்நடைகள் ரூ. 1 கோடிக்கு மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.