தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாமக தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி, பாப்பாரப்பட்டி பகுதியில் வாரச்சந்தை அமைய உள்ள இடத்தை அதிகாரிகளோடு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.மணி, "பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 கடைகள் கட்டப்பட உள்ளது. சந்தை குறித்து முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உடனடியாக பணியைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இரண்டாவது அலகு 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைகள் தயாராகி வருகின்றன. இத்திட்டம் நிறைவேறினால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும், நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்: நீதிமன்றம் உத்தரவு