தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குள்பட்டது முக்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10 கிராமங்கள் அடங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு வழங்கும் பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடுகளைப் பெற இக்கிராம மக்கள், ஊராட்சி மன்ற செயலர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன்படி, தகுதியான பயனர்கள் தேர்வுசெய்யப்பட்டு, வீடுகள் ஒதுக்கப்பட்டுவருகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ் முனியப்பன், சின்னசாமி என்பவர்கள் அரசு வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசாமி, முனியப்பன் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சி அமைப்புக்கான புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சின்னசாமி மனைவி தேவகி, புதிய ஊராட்சி மன்றத் தலைவரிடம் இலவச வீடு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு புதிய ஊராட்சி மன்றத் தலைவர், சின்னசாமி பெயரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிக்கு, இரண்டு முறை வீடு வழங்க முடியாது என பதிலளித்துள்ளார். இன்னும் கூரை வீட்டில் இருக்கும் தனக்கு அரசு வீடு ஏதும் வழங்கவில்லை என தேவகி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பயனாளிகளின் பட்டியலைச் சரிபார்த்ததில், சிறப்பு அலுவலர், ஊராட்சி செயலர் இணைந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், போலி ஆவணங்களைத் தயாரித்து, இறந்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்கி பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், 2012ஆம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்கப்பட்ட, குப்புசாமி என்பவர் பெயரில், 2018ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில், வீடு ஒதுக்கி, அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஊராட்சி மன்றச் செயலர் சரவணன், குப்புசாமியிடம், வேறு ஒருவரது பணம் உங்களது வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்டது எனக் கூறி, அதைத் திருப்பிக் கேட்டு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து முக்குளம் ஊராட்சியில், இறந்தவர்கள் பெயரிலும், ஏற்கனவே பயன்பெற்றவர்களுக்கும் இரண்டாவதாக போலியான ஆவணங்களைத் தயாரித்து அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடி குறித்து, அமைச்சர் அன்பழகன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலர், சிறப்பு அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :16 பேர் சட்டவிரோத பணிநீக்கம்; சிஐடியு வட்டாட்சியரிடம் மனு!