கர்நாடக மாநிலம், கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஒகேனக்கல் வழியாக அஞ்செட்டி செல்லும் சாலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது.
இந்த சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் வழியாக அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், பெங்களூருவுக்கு செல்லும் பிரதான சாலையில் ஆறு இடங்களில் தண்ணீர் 5 அடி உயரத்திற்கு மேல் ஓடுகிறது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து தருமபுரிக்கு வருபவர்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் ஓசூர் வழியாக தருமபுரிக்கு வர 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய சுழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.