தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 40 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனித் தனியாக கோரிக்கை மனு அளிப்பதற்காக விவசாயிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மனு கொடுக்க வந்த விவசாயிகளிடம் காவல் துறையினர் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மனு கொடுக்கச் செல்ல வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால், தனித்தனியாக மனு அளிப்பதால், அனைவரையும் உள்ளே அனுப்ப வேண்டும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
காவல் துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே சிறிது நேரம் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது காவல் துறையினரைக் கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் 10 பேர் கொண்ட குழு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் காவல் துறையினரிடம் முறையிட்டனர். இதனையடுத்து பத்து பேர் கொண்ட குழுவினர் அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியர் இடத்தில் வழங்கினர்.
இதையும் படிங்க: டெல்லி நாடாளுமன்ற திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்திய சோனியா மற்றும் ராகுல்!
விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில், ’தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பீனியாறு பகுதியில் மரவள்ளிக் கிழங்கு ஆலையின் ரசாயனக் கழிவுகள் ஆற்றில் நேரடியாக கலக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதுபோல் ஆற்றில் வருகின்ற தண்ணீரை ராட்சத குழாய்கள் அமைத்து, ராட்சத குளங்களை வெட்டி, அதில் தண்ணீர் நிரப்பி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ரசாயன கழிவுகளால் விவசாய நிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 15 ஆண்டுகளாக விவசாயிகள் சார்பில் பல்வேறு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியர் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலையை தடை விதிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு தென்னை, பனையிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாய விலைக் கடைகளில், பாமாயிலுக்குப் பதிலாக விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 150 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பச்சை தேங்காயை டன் ரூ.40 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன்னுக்கு ரூ.5000, மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12,000, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் என வழங்க வேண்டும். அதேபோல் மாட்டுப்பால் 50 ரூபாய்க்கும், எருமைப்பால் 75 ரூபாய் என வழங்கிட வேண்டும்’ என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்.. ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு விசாரணை... உச்ச நீதிமன்றம் உத்தரவு!