தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சின்ன கவுண்டம்பட்டி, பொம்பட்டி கிராமங்களில் உள்ள விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தினசரி சுமார் 3 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளிடையே பெறப்படும் பால் அளவை ஆவின் நிர்வாகம் குறைத்துவந்தது. பொம்பட்டி, சின்ன கவுண்டம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களிலுள்ள விவசாயிகளிடமிருந்து, கூட்டுறவுச் சங்கத்தில் பால் கொள்முதல் செய்வதை முற்றிலுமாக ஆவின் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இதனால், விவசாயிகள் பால் விற்பனை செய்ய வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து ஆவின் நிர்வாகத்திடம் முறையிட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை. பால் வாங்குவதை குறைத்துக் கொண்டபோதே, விற்பனை செய்ய வழியில்லாமல் தவித்த விவசாயிகள், தற்போது கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தருமபுரி நான்கு வழிச்சாலை சந்திப்பில், சுமார் 200 லிட்டர் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆவின் நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கமிட்டவாறு சென்ற விவசாயிகள், ஆவின் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முறைகேடுகளின் புகலிடம் ஆவின் நிர்வாகம் - பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!