தர்மபுரி : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.26) வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாலக்கோடு, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ், “கடந்த ஆறுமாத காலமாக சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான வசதிகளை செய்துதரக் கோரிக்கை விடுத்து, மனுக்களை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேளாண்துறை அலுவலர்கள், சொட்டுநீர் பாசன கருவி வழங்காமல் இழுத்தடித்து வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. அன்னசாகரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டிருக்கும் சேதத்தால், கசியும் சாக்கடை நீர் தொடர்ந்து விவசாய நிலங்களில் பாய்ந்து விளைச்சலை கடுமையாக பாதிக்கிறது. இது குறித்து புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, “சொட்டுநீர் பாசன உபகரணங்கள் வாங்க மானியம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்பாக உடனடியாக பதிலளிக்க வேண்டும்” என வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், விவசாய நிலங்களில் கழிவுநீர் பாய்ந்து வருவது குறித்து பதிலளிக்க தர்மபுரி நகராட்சி அலுவலர்களை வருவாய் அலுவலர் ராமமூர்த்தி அழைத்தார். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், நகராட்சி சார்பில் அலுவலர்கள் யாரும் கலந்துகொள்ளாததால் இது தொடர்பாக மீண்டும் புதிதாக புகாரளிக்க விவசாயிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க : 'விவசாயிகள் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி!'