தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த காளப்பன் என்பவருக்குச் சொந்தமாக 0.75 சென்ட் விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதியன்று திருமல்வாடி பகுதியைச் சேர்ந்த ராமன், பொன்னுசாமி, கணேசன், சிவன், சக்திவேல் உள்பட 14 பேர் இந்த விவசாய நிலம் நத்தம் புறம்போக்கு நிலம் எனவும், நிலத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றும், உடனடியாக நிலத்திலிருந்து காலி செய்யாவிட்டால், தாங்கள் காலி செய்து விடுவோம் என காளப்பனை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், இந்த நிலத்தில் இருந்த மரங்கள், தக்காளிச் செடிகள், வாழை மரங்கள், தீவனப்பயிர்கள், கிணறு, மோட்டர் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கவந்த காளப்பன் தனது குடும்பத்துடன் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார். இதனைக் கண்ட அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு தண்ணீா் ஊற்றி காப்பாற்றினர்.
இதையடுத்து, காளப்பன் தங்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தார்.