தருமபுரி: பென்னாகரம் அடுத்த அஜ்ஜனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜகோபால். இவர் தனது குடும்பத்தினருடன் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வசித்து வந்துள்ளார். ராஜகோபால் விவசாய நிலத்திற்கு அருகில், அரசு ஓடை புறம்போக்கு நிலம் இருந்துள்ளது.
இந்த ஓடை புறம்போக்கு நிலம் வழியாகத்தான் தங்களது விவசாய நிலத்திற்கு வழி இருப்பதாகவும், காலம் காலமாக அந்த வழியில்தான் சென்று வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், குமார், சுரேஷ், பொன்முடி, மகேந்திரன் ஆகியோர் ஓடை புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ராஜகோபால் வயலுக்குச் செல்ல வழி விடாமல் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், விவசாய நிலத்திற்கு வழி விடாமலும், வயதான நிலையில் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு கூட வழியில்லாமல் ராஜகோபால் குடும்பத்தினர் பல சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜகோபால், தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ராஜகோபால் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்களை தடுத்துள்ளனர். பின், அவர்களிடம் பிரச்னையை விசாரிக்கையில், “தங்களது விவசாய நிலத்திற்காக காலம் காலமாக பயன்படுத்திய வழியை, அரசு ஓடை புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்து வழி விடாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாய குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் திடீர் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!