தர்மபுரி மாவட்டத்தில் 23 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால், மலைக்கு மேல் அமைந்துள்ளது வத்தல்மலை பெரியூர் பகுதி. இந்தப் பகுதியில் கொட்டலாங்காடு, பால்சிலம்பு, ஒன்றியங்காடு, மன்னாங்குழி, குழியனுா், நாயக்கனுா், பெரியூர், சின்னங்காடு ஆகிய கிராமங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். வருடம் முழுவதும் இப்பகுதியில் அவர்கள், காஃபி, கடுகு போன்றவற்றை விளைவித்துவருகின்றனர்.
மலைப் பகுதிகளில் வசிக்கும் இவர்களும் தண்ணீர்ப் பஞ்சத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். இவர்களும் பல ஆண்டுகளாக தண்ணீர்ப் பஞ்சத்தால் தவித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். சுமார் ஏழு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக இரண்டு கிணறுகளை மட்டுமே நம்பியுள்ளதாகவும், அதிர்ச்சித் தகவலை கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, பெரியூரில் தாழ்வான பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து, மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு, மக்கள் அந்த நீரை தங்களின் பிற தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஊரிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிணற்றைக் கொண்டு தங்களது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவருவதாகவும், ஆனால், இந்த நீரும், புழுக்கள், பூச்சிகளுடன் இருப்பதால், வடிகட்டி குடித்து வருகிறோம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மொத்த கிராமமும், குடிநீர்த் தேவைக்காக இந்தக் கிணறுகளைப் பயன்படுத்துவதால், மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கிணறு வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. அச்சமயங்களில், பல மணி நேரம் காத்திருந்து, கிணற்றில் உண்டாகும் ஊற்று நீரை இறைத்துச் செல்கின்றனர். இது உப்பு நிறைந்ததாகவும், குடிக்க ஏதுவான நிலையில் இல்லாமலும் இருப்பதாக பலமுறை பொதுப்பணித்துறையினரிடமும் புகாரளித்துள்ளனர்.
ஆனால் எவ்வித உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினாலும், மின் மோட்டார்களைப் பயன்படுத்தினால், குடிநீர் வீணாகும் என்ற அச்சத்தினாலும், கடந்த 70 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள சுமார் 120 குடும்பத்தினர் வாளியைக் கொண்டு, நீர் எடுத்து வருகின்றனர்.
தங்கள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கிராமத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தி சுத்தமான குடிநீரை தங்கள் மலை கிராமத்திற்கு வழங்க வேண்டும் என்பது இம்மலை கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது. மழையில் பெரும் மழை பெய்து அருவிகள் பெருக்கெடுத்தாலும், இவர்களுக்கான குடிநீர்த் தேவை, இந்தச் சிறிய கிணற்றைச் சார்ந்தே உள்ளது. இவர்களை மேலும், தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாக்காமல், சுகாதாரமான குடிநீர் கிடைக்க அரசு ஆவன செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
இதையும் படிங்க: தண்ணீர் பஞ்சம் குறித்த ஆசிரியரின் விழிப்புணர்வு பாடல்!