தருமபுரி ரயில் நிலையம் அருகே ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்களால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாலமுருகன் கோயில் ரயில் நிலைய இடத்தில் உள்ளதாகவும், இதற்கு குடமுழுக்கு நடத்தக் கூடாது, கோயிலை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென தருமபுரி ரயில் நிலையப் பொறியாளர் ராம் மோகன் என்பவர் கோயில் நிர்வாகக் குழுவினருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனிடையே, பாலமுருகன் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரைச் சந்தித்து, கோயிலில் குடமுழுக்கு நடத்த ரயில் நிலைய அலுவலர்கள் தடை விதிப்பதாகவும், அதனை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், குடமுழுக்கு நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பாலமுருகன் கோயிலை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியாதவது, "ரயில் நிலைய அலுவலர்கள் இக்கோயிலில் எந்தவிதமான பணிகளும் நடைபெறக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் இக்கோயிலில் நடைபெறவில்லை.
மத்திய அரசு கோயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதுதான் மத நம்பிக்கை. மத்திய அரசு நம்பிக்கையை மீறி அலுவலர்கள் செய்யக் கூடாது. இவ்வாறு செய்வது மத நம்பிக்கைக்கு எதிரானது. ரயில்வே நிர்வாக அலுவலர்கள் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு தடையாக இருக்கக் கூடாது. குடமுழுக்கு நடத்த உயா் அலுவலர்களிடம் பேசி தீர்வு காணப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தேர்வு ரத்து என்றாலும் கட்டணம் செலுத்த வேண்டும் - உயர்கல்வித்துறை