பாப்பிரெட்டிப்பட்டி சட்டபேரவையில் தொகுதியில் 10 வாக்குச்சாவடியை பாமகவினர் கைப்பற்றியதாக திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மலர்விழியிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி கூறுகையில், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனு குறித்து பொது தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
பலமுறை இந்த வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டோம். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 15ஆம் தேதி மாலை சந்தித்து சில வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பேரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக வேட்பாளர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில், தேர்தல் நுண்பார்வையாளர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. தேர்தல் நுண்பார்வையாளர்கள் தரும் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.