தர்மபுரி: நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட தொம்பராகம்பட்டி வாக்குச்சாவடியில் இறந்த வாலிபர் ஒருவரின் வாக்கும் முதியவர் ஒருவரின் வாக்கினையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக திமுகவினர் குற்றஞ்சாட்டி வாக்குப்பதிவை சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைத்தனர். உடனடியாக வாக்குச்சாவடிக்கு வந்த தர்மபுரி திமுக சட்டப்பேரவை வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
வேட்பாளரின் கேள்விகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் பதிலளித்தனர். பின்பு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசிய திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி, 'பாளையம்புதூர் ஊராட்சி தொம்பரகம்பட்டி கிராமத்தில் கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்தது. குமரேசன் என்ற மாணவன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இறந்த நபரின் வாக்கைப் பதிவுசெய்துள்ளனர்.
வயதான முதியவர் ஒருவரின் வாக்கை வேறொரு நபர் பதிவுசெய்துள்ளார். வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டது உறுதியாகியது. முகக்கவசம் அணிந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லை என அலுவலர்கள் கூறுகின்றனர். முறையான வகையில் உரிய ஆவணங்களைப் பரிசீலனைச் செய்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென்று தெரிவித்தேன். தற்போது வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: ’வாக்குச்சாவடிக்கு வெளியே பாஜக டோக்கன் கொடுக்கிறது’ - கமல் குற்றச்சாட்டு