தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி, கண்காணிப்புக் குழு கூட்டம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமியும், சம்பத்குமாரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அப்போது வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்த திட்டத்திற்கு மீண்டும் எதற்கு திமுகவினர் பூமி பூஜை போடுகின்றனர் எனக் கேட்டு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்ததாவது, "தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுவருகின்றன என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. தருமபுரியின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மத்திய அரசிடமிருந்து நான் பரிந்துரைத்த திட்டங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தவே பூமி பூஜை போட்டு தொடங்கிவைத்தேன். இதற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோபப்படுகின்றனர். அவர்கள் கூட்டத்தை நடத்தவிடாமல், புறக்கணிக்கவே வந்தவர்கள்" என்றார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு!