தருமபுரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கின்போது மே 10 முதல் இதுநாள்வரை (ஜூன் 8) மதுவிலக்கு தொடர்பாக 362 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் 415 பேர் கைதுசெய்யப்பட்டு இவர்களில் 202 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 528 லிட்டர் கள்ளச்சாராயமும், 4520 லிட்டர் சாராய ஊறல் போன்ற திரவங்களும், 7056 பாட்டில்கள் அரசு மதுபானங்களும், 23,136 பாட்டில்கள் கர்நாடக, பிற மாநில மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மது கடத்தலுக்கு மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட 65 இருசக்கர வாகனங்களும், 22 நான்குசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மது விலக்குத் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் அழைத்து அவர்கள் இக்குற்றம் தொடர்பாகவும், இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாகவும், இக்குற்றத்தை கைவிட்டால், அவ்வாறு கைவிட்டு மனம் திருந்தி வாழ விரும்பும் குற்றவாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தனர்.