தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்தை எல்லபுடையாம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 48 மாணவர்களுடன் இயங்கிவருகிறது. இப்பள்ளியில் ஒரு தலமையாசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
மேலும், தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். இதனால் தற்போது கண்ணன் என்ற ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றிவருகிறார். அவரும் பணிச்சுமை காரணமாக மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்றும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வாயிலின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கல்வி அலுவலர்கள் பெற்றோர்களுடன் பேசி கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதாக உறுதியளித்தனர். இதன்பின்னர் மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.