தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ஏரியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அண்ணா நகர், நேதாஜி நகர் உள்ளது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் மூர்த்திக்கு, சிறு வயதிலேயே இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. மேலும், காது கேட்கும் திறனும் செயலிழந்தது. தற்போது, அவர் தையல் தொழில் செய்து வருகிறார். மூர்த்தி வீட்டிலிருந்து கடைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒன்றரை கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று சக்கர வாகனம் அளிக்கப்பட்டும், அதில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்.
ஏனென்றால், அவரது வீட்டிலிருந்த வெளியே செல்ல மூன்று அடி அகலமான சிறிய பாதை மட்டுமே உள்ளது. சிறிய பாதையில் மாற்றுத்திறனாளி வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. தினமும் சுமார் ஒரு கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் பயணம் செய்த பிறகு தனது மூன்று சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்கிறார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கரடுமுரடான பாதையில் அவர் தவழ்ந்து செல்லும் காட்சி காண்போரை கண்ணீர் வரவழைக்கிறது.
தற்போது, பெய்த கன மழையால் அந்த பாதை முழுவதும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இருப்பினும், தனது இருசக்கர வாகனத்தில் சேற்றில் தவழ்ந்து வேலைக்கு செல்கிறார். கடந்த மாதம் இப்பகுதியில் பாதை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் சார்பில் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால், பூமி பூஜைக்கு பின் எந்த பணியும் நடைபெறாததால் மாற்றுதிறனாளி மூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டடோர் பாதிக்கப்பட்டுள்ளனா்.