தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட மாரண்டஅள்ளி பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர் "தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின்படி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாத நோன்பு கஞ்சிக்காக அரசு 5 ஆயிரத்து 450 டன் அரிசி வழங்க உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 29 பள்ளிவாசல்களில் 20 ஆயிரத்து 595 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 82 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது, இந்த அரிசி அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.
மேலும் இந்த ஆண்டு கரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியை சமூக இடைவெளி கடைப்பிடித்து குடும்பங்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகிகள் அரசின் உத்தரவினை கடைபிடித்து ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்கும் அரிசியை தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து வழங்கி பயன்பெறுமாறு அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு நோ என்ட்ரி - களப்பணியாளர்களை கெளரவித்த சமூக ஆர்வலர்