தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், உத்தனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் விவசாயம், கட்டடப் பணிகளுக்கு சென்று வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதனால் ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு 45 நாள்களை கடந்ததால் அவர்கள் தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் வேண்டுகோள்விடுத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் கே.பி.அன்பழகன் முயற்சி மேற்கொண்டு தனது சொந்த செலவில் இரண்டு பேருந்துகளை தருமபுரியிலிருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திற்கு அனுப்பிவைத்தார்.
நேற்று தமிழ்நாடு தொழிலாளர்கள் உடுப்பியிலிருந்து கிளம்பி இன்று காலை இரண்டு பேருந்துகள் மூலம் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்பு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளனர். வெளிமாநிலத்தில் சிக்கித்தவித்தவர்களை மீட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினருக்கு அவர்கள் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கோவாவில் இருந்து வீடு திரும்பிய கூலி தொழிலாளர்கள்!