தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், மாரண்டஅள்ளி அருகே உள்ள கரகூர் சந்தை தோப்பு கிராமத்தில் இந்தாண்டிற்கான எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.
முன்னதாக கிராம மக்கள் மேளதாளங்களுடன் குலவழக்கப்படி கோ பூஜை செய்து புனிதநீரை காளைகளின் மீது தெளித்தனர். அதனைத் தொடர்ந்து, ஊர் கவுண்டர் மாடு விடப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
சீறிப் பாய்ந்துவரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை விரட்டிச் சென்றனர். இதனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
மாடுகள் ஓடும்பொழுது பார்வையாளர்கள் மீது பாயாமல் இருப்பதற்காகப் பாதையின் இரண்டு பக்கமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 10-க்கும் மேற்பட்ட மாரண்டஅள்ளி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறப்பாக மாடுகளைப் பிடித்த இளைஞர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க : குத்துச்சண்டை வீரராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!