தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். இதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த ஒரு வாரமாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே வைரஸ் பரவல் குறைவான மாவட்டமாகவும் இறப்பு விகிதம் குறைந்த மாவட்டமாகவும் இருந்த தருமபுரியில் ஊரடங்கு தளர்வு காரணமாக தொற்று அதிகரித்துள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் இன்னும் ஒரு வாரத்தில் தருமபுரி மாவட்டத்தில் சிகிச்சையளிக்க முடியாத சூழல் உருவாகும்.
மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி 2020-21இன் கீழ் ஒரு கோடி ரூபாய் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வாங்கவேண்டிய பட்டியலுடன் கடிதம் அனுப்பப்பட்டது. அது கரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. 2019-20ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் என்னுடைய கையொப்பம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் நிதி எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் எதற்காக எடுக்கப்பட்டது என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு மருத்துவமனை உபகரணங்கள் வாங்க எடுக்கப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது. ஆனால், என்ன உபகரணங்கள் வாங்கப்பட்டது என்பதற்கான முறையான பதில் கிடைக்கவில்லை.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மற்றும் சுகாதாரத் துறை பணிகள் இணை இயக்குநரிடம் வாங்கவேண்டிய உபகரணங்கள் குறித்து கடிதம் மூலம் கேட்டதற்கு உபகரணங்கள் வாங்கப்பட்டன. ஆனால், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்டனவா என தெரியவில்லை என தெரிவித்தனர்.
மக்களவை உறுப்பினரின் கையெப்பம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் நிதி எடுக்கப்பட்டுள்ளது குறித்து புள்ளியல் துறை அமைச்சகத்தில் புகாரளிக்கவுள்ளேன். இது குறித்து கண்காணிப்புக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். நிதி கையெழுத்திடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே உள்ளது.
மாவட்ட ஆட்சியர் மீதும் புகார் அளிக்கப்படும். தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப்பினரை அழைக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை உள்ளது. இதை பின்பற்றாத தருமபுரி ஆட்சியர் மலர்விழி மீது உரிமை மீறல் பிரச்னையை மக்களவையில் எழுப்புவேன்" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி இல்லையா? - எம்.பி.செந்தில்குமார்