தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் காணவில்லை முறைகேடு நடந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் மீது குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து, செந்தில் குமாருக்குப் பதிலடி தரும் வகையில் நேற்று (செப்.11) தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், 'நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் ஒரு கோடி நிதி கரோனா தடுப்புப் பணிக்காக எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றேன். அரசியல் காரணங்களுக்காக, இப்படி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார்' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (செப்.12) தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 'தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரோனா தடுப்புப்பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க வழங்கப்பட்ட நிதியினை வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றாமல் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, எனது கருத்துகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மறுப்பு அறிக்கை விடுத்ததன் பெயரில், உண்மையான கருத்துகளைப் பத்திரிகை வாயிலாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மார்ச் 24, 27ஆம் தேதிகளில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாயும், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் ரூபாயும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அளிக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தேன்.
மார்ச் 28ஆம் தேதி கடிதத்தில் 2020 என ஆண்டுத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாக ஒப்புதல் கடிதத்தில் மருத்துவ உபகரணங்களை 2020, 2021ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியின்கீழ், நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின்படி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு கோடியும்; மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய ஆணை வழங்கியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் நேற்று மறுப்பு அறிக்கையில் நிதியாண்டு ஏதும் குறிப்பிடவில்லை என்று கூறுவது விந்தையாக உள்ளது. தருமபுரி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரை, எனது உதவியாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரு கோடிக்கான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கிய விவரங்களைக் கோரியதில், இது தொடர்பாக தமது கவனத்திற்கு எதுவும் வரவில்லை எனவும்; உபகரணங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட கமிட்டியின் மூலமாகத்தான் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கும் எனவும் விவரங்கள் எதுவும் தெரியாது எனவும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை அணுகுமாறு தெரிவித்து விட்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தமது மறுப்பு அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர், தமது கடிதத்தில் நிதியாண்டு ஏதும் குறிப்பிடாததால் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரோனா தடுப்புப் பணிகளுக்காக எடுக்கப்பட்டது எனவும்; கரோனா நிதியை மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு மட்டுமே கையாளும் எனவும், இக்குழு கூடி நிதி மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையின் அடிப்படையில் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் துணை இயக்குநர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் எவருமில்லை என்று தெரியவருகிறது. தகுதியுள்ள மருத்துவ உபகரணங்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு இருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உள்ளது.
எனவே, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்குப் புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்' என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.