தருமபுரி: அரூர் அடுத்து கலசப்பாடி, அரசநத்தம் என்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலின்போது நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திமுக சார்பில் போட்டியிட்ட டி.என்.வி. செந்தில்குமார் அப்பகுதி மக்களை சந்தித்து தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் எனவும், சாலை வசதியை ஏற்படுத்தித்தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறு உறுதி அளித்தது போலவே நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப்பேச்சில், இப்பகுதி மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக வனத்துறை மற்றும் மத்திய வனத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகத்தை அணுகி சாலை வசதி செய்து தர ஏற்பாடுகளை செய்து வந்தார். தற்போது கலசப்பாடி, அரசநத்தம் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து ஏற்படுத்த வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி செந்தில்குமார், ”அரூா் கலசப்பாடி, அரசநத்தம் பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.
இதனை அறிந்து நேரடியாகச் சென்று அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எந்த கட்சிக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள். தேர்தலை புறக்கணிக்க வேண்டாம், ஐந்தாண்டு காலத்தில் சாலை வசதியை ஏற்படுத்தித் தருவேன் என்ற வாக்குறுதி அளித்தேன். வெற்றி பெற்ற பிறகு இதனை நிறைவேற்ற கன்னிப் பேச்சில் கிராமத்தை குறிப்பிட்டுச் சாலை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் மூலமாக சாலை அமைப்பதற்காக முதற்பட்ட பணியை துவக்கி தொடர்ந்து வலியுறுத்தி மாநில அரசின் வனத்துறை மூலமாக அளவீடு எடுத்தபோது 5 கிலோமீட்டர் கணக்கிடப்பட்டு, 4 ஹெக்டோ் நிலம் தேவைப்பட்டது. இன்றைய சூழலில் வனப்பகுதியில் சாலை அமைப்பதற்கு ஆறு வகையான தடையின்மை அனுமதி பெற வேண்டி உள்ளது.
மத்திய அரசிடம் மூன்று அனுமதியும், உச்ச நீதிமன்றத்திடம் ஒரு அனுமதியும் என 4 ஆண்டுகளாக ஒவ்வொரு தடையின்மை அனுமதி பெற்று மத்திய வனத்துறை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்தும் மத்திய அரசு அலுவலர்கள் நேரடியாக இப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி அரசு அலுவலர்கள் மூலமாகவும் மற்றும் மத்திய அரசு ஒத்துழைப்பு மூலமாகவும் அனுமதி கிடைத்துள்ளது. என் வாக்குறுதிகளை நம்பி பெருவாரியான வாக்கு அளித்தார்கள். அவர்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பு அளித்த தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி” தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: படித்துவிட்டு வேலையில்லையா.? உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க.. தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு!