தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரியில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பங்கு பெற பொதுப்பணித்துறை மூலம், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி.செந்தில்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி பணி தொடக்க நிகழ்ச்சிக்கு சென்ற தர்மபுரி எம்பி, அங்கு பணி தொடங்கும் பொழுது சமஸ்கிருதவேத மந்திரம் முழங்க பூமி பூஜை நடைபெற்றது. இதனை பார்த்த செந்தில்குமார், “இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இந்து மத நிகழ்ச்சியா? மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்டியன் பாதர் எங்கே? இஸ்லாம் மதத்தில் இமாம் எங்கே?
திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இது போன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களையும் அழைத்து நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் எந்தவித பூஜையும் இல்லாமல் ஏரி சீரமைப்பு பணிகளை தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: 'ஜீ உங்க ஆசிரமத்துல கூட்டி பெருக்குற வேலையாவது குடுங்க ஜீ...' - திருமணத்தில் நித்யானந்தாவிற்கு பேனர் வைத்த சிஷ்யர்கள்