தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த நிலையில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இவரை முட்டிபோட வைப்பது, சிகரெட் வாங்கி வரச் சொல்வது என ராகிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ராகிங் கொடுமையால் தற்கொலை முயற்சி
சீனியர் மாணவர்களின் ராகிங் கொடுமையால் மன அழுத்தத்திலிருந்த அந்த மாணவர் கடந்த டிச.6 ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சஸ்பெண்ட்டும் வழக்குப்பதிவும்
இச்சம்பவத்தையடுத்து, தர்மபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளி ராகிங்கில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை விடுதி, கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவன் அளித்தப் புகாரின் பேரில் ராகிங்கில் ஈடுபட்ட நான்கு சீனியர் மாணவர்கள் மீது கேலிவதை தடுப்புச்சட்டம் பிரிவு 4இன் கீழ், தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு - விசிக போராட்டம்