தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் மேலும் ஐந்து நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் 86 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,ஏரியூர் சீல நாயக்கனூர் சிப்ஸ் கடை உரிமையாளர் ஹைதராபாத்தில் இருந்து திரும்பியுள்ளார். இவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி வள்ளுவர் நகர் ஏ ஜெட்டிஅள்ளி பகுதியைச் சார்ந்த 55 வயது நபருக்கும், கபாலக்கோடு ரெட்டியூர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பென்னாகரம் பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியைச் சார்ந்தவர் பெங்களூரு சென்று திரும்பிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர், பரிசோதனை முடிவு வருவதற்குள் பென்னாகரம் இந்தியன் வங்கிக்கு சென்று வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி பணியாளரிடம் தனித்தனியாக சந்தித்து உரையாடியுள்ளார். இவருக்கு தொற்று என்று உறுதியானதையடுத்து, வங்கியில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொண்டனா்.
வங்கிக்கு வந்து சென்ற நபருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் பென்னாகரம் இந்தியன் வங்கி மூடப்பட்டு அப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ரத்தம் வழிந்த நிலையில் யானை உயிரிழப்பு: துப்பாக்கியால் சுட்டுக் கொலையா?