சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருனூற்று மலை அடுத்த பெரியகுட்டிமடுவு மலை கிராமத்தில் வனத்தையொட்டி கள்ளத்தனமாக சிலர் நாட்டுத்துப்பாக்கி தயாரித்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர் நாட்டுத்துப்பாக்கி தயாரித்தவர்களை பிடிக்க முயன்ற போது ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் தப்பி ஓடினர். இதையடுத்து அங்கிருந்த இரண்டு துப்பாக்கிகள், 20 துப்பாக்கி கட்டைகள், உதிரி பாகங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.
வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனப்பகுதியில் ஈட்டி மரங்களை வெட்டி கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்தவர் பெரியகுட்டி மடுவு கிராமத்தை சேர்ந்த வரதன் மகன் ராமர், கரியான் மகன் ராமர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுடன் இருந்த பெண் யார் என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.