தருமபுரி: தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நடமாடும் தக்காளி மதிப்பு கூட்டம் இயந்திரம் எங்கே இருக்கிறது? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை மாவட்ட வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறையை நோக்கி எழுப்பியுள்ளனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், 'தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் இருந்து நீரேற்று மூலம் காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள விவசாயிகள் மருந்து தெளிப்பதற்காக, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரங்களை கொள்முதல் செய்து அரசே விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது நேரில் ஆய்வு செய்யாமாலேயே பதில் அளிப்பதாகவும்; ஆகவே, முறையாக நேரில் ஆய்வு செய்து உரிய பதிலளிக்கவும், நில அளவை செய்ய முறையாக உரிய கட்டணம் செலுத்தியும் விஏஓ மற்றும் நில அளவையர் சிலர் விடுமுறை நாட்களில் நிலம் அளவீடு செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அப்போது, பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற விவசாயி, 'தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்' எனவும், தக்காளி தற்போது கிலோ ரூ.10-க்கு குறைவாகவே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே, ரூ.200-க்கு விற்றபோது விவசாயிகள் கோடீஸ்வரர் ஆனார்கள் என்று மக்கள் பேசினர்; ஆனால், இன்று கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. தக்காளிகளை கொள்முதல் செய்து ஆயிரக்கணக்கான டன் குளிர் பதன கிடங்கில் வைத்து, அதிலிருந்து சாஸ் தயாரிக்கலாம். ஆனால், அரசு அதற்கு ஏன் முன் வரவில்லை? தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நடமாடும் தக்காளி மதிப்பு கூட்டம் இயந்திரம் எங்கே இருக்கிறது?' என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பினார்.
இவரின் கேள்விகளுக்கு வேளாண்துறை அலுவலா், 'நாட்டு தக்காளியில் இருந்து மட்டும்தான் சாஸ், ஜாம் போன்றவை தயாரிக்க முடியும் என பதிலளித்தனர். இதனை ஏற்காத பெரும்பாலான விவசாயிகள், ஹைபிரிட் தக்காளியை சாகுபடி செய்கின்றனர். சிங்கப்பூரில் இதே தக்காளியில் இருந்து தான் சாஸ், ஜாம் எல்லாம் தயாரிக்கும்போது, ஏன் நீங்கள் இதை செய்ய முன்வரவில்லை? இந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்திற்கு ஒரு சில ஒன்றியங்களில் வருவாய்த்துறை சார்ந்த அதிகாரிகள் வராததால் விவசாயிகள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தடுமாறினார்.
காட்டுப்பன்றி குறித்து பேசிய விவசாயிக்கு பதில் அளித்த வருவாய் அலுவலர் பிரியா, 'வயல்களை சுற்றிலும் வலைகளை கட்டி விடுவதால் காட்டுப்பன்றி வயல்களை தாக்குவதில்லை எனவும், கரும்பு தோட்டத்தில் விவசாயிகள் இதைப் பயன்படுத்தி பன்றி தாக்குதலை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். இதனை நீங்களும் பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத் திட்டத்தில் தீண்டாமை? - கரூரில் பரபரப்பு!