தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், இலளிகம், நார்த்தம்பட்டி, மாதேமங்கலம், மிட்டாரெட்டிஅள்ளி, பூதனஅள்ளி, தொப்பூர், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட கிராம ஊராட்சிக்குட்பட்ட விவசாய நிலங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்து மக்களை ஏமாற்றி வருகிறது. இதனால், இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் அடிமட்டத்திற்கு சென்றதால் ஏரி, விவசாயக் கிணறுகளும் நீர் இல்லாமல் வறண்ட பாலைவனம்போல் காட்சியளிக்கின்றன.
வானம் பார்த்த பூமியாகிவிட்டதால், விவசாய நிலங்களில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல், காய்ந்து வருவதுடன்,தென்னை மரத்தின் வோ் பகுதிக்கு போதிய உயிர் சத்து இல்லாததால், அடியோடு காய்ந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், தென்னை மரங்கள் மூலம் இளநீர், தேங்காய், கீற்று ஓலை ஆகியவைகள் கொண்டு வருவாயை ஈட்டி வந்த பல லட்சக்கணக்கான தென்னை விவசாய குடும்பங்கள் தற்போது வாழ வழி இல்லாமல் தவித்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தென்னை விவசாயத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.